எமது உயிரிலும் மேலான கண்மணி ரசூளுல்லாஹ்வை கேவலப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படத்துக்கு எதிராக முழு உலகிலும் எதிர்ப்பு ஆர்பாட்டங்கள் நடை பெற்று வருகின்றது. இந்தப் போராட்டங்களில் எமது இறுதித் தூதரின் மீது கொண்ட தூய அன்பினால் உயிரிழந்த சகோதர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக.
இஸ்லாமிய எதிர் சக்திகள் முஸ்லிம்களின் நம்பிக்கை சார்ந்த விடயங்களில் அவ்வப்போது கை வைத்து முஸ்லிம்களின் உணர்வுகளை சீண்டி விட்டு அதில் பிரபலம் அடைவதற்கு முயற்சித்து வருகின்றன. எனினும் மறுபுறத்தில் இவ்வாறான நிகழ்வுகளினால் மாற்று கொள்கையாளர்களுக்கு மத்தியில் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் பற்றிய தேடல் அதிகரித்தும் வருகின்றது.
எமது நாட்டிலும் இஸ்லாமிய விரோத சக்திகள் சிங்கள மொழி மூலமான சுமார் 11 இனைய தளங்களின் ஊடாக முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றார்கள்.
நமது நாட்டில் அண்மைக் காலமாக முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் நிறுவன மயப்படுத்தப்பட்ட நிலையில் மிகவும் பகிரங்கமாக முன்னெடுக்கப்பட்டு வருவதை நாம் அவதானிக்கின்றோம். நமது வரலாற்றிலும் இது போன்ற பல சூழ்சிகளை நாம் சந்தித்திருக்கின்றோம். சகோதர பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை சமூகத்தில் உள்ள சில குழுக்களால் முஸ்லிம்கள் என்பதற்காகவே நாம் தாக்கப்பட்டுள்ளோம். பள்ளிவாசல்களில் வைத்து எமது சகோதர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். மூன்று தசாப்தங்கள் கடந்தும் நமது பூர்வீக பூமியை துறந்து வாழும் நிலை இன்னும் தொடர்கின்றது. ஒருசில கல்வி மற்றும் தொழில் நிறுவனங்களில் அவ்வப்போது எமது அடிப்படை உரிமைகள் மீறப் பட்டிருக்கிறது, எமது மத சம்பிரதாயங்களுக்கும் தடை விதிக்கப்பட்டிருக்கின்றது.
இந்த நாட்டில் ஏனைய சமூகங்களுக்கு இருக்கின்ற அனைத்து உரிமைகளும் முஸ்லிம் சமூகத்துக்கும் இருக்கின்ற நிலையில் நாம் இவ்வாறான நிகழ்வுகளுக்கு முகம் கொடுக்கும் போது எமது உரிமைகளை கோரி பாதையில் இறங்குகிறோம், அரசியல் அழுத்தங்களை பிரயோகிப்பதற்கு முயற்சிக்கின்றோம்.
எமது நாட்டிலும் சர்ச்சைக்குரிய திரைப்படத்துக்கு எதிரான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், ஹர்த்தால்கள் என நாட்டின் பல பகுதிகளிலும் நடைபெற்றும் நடாத்துவதற்கான முஸ்தீபுகளும் எடுக்கப்பட்டும் வருகின்றது. எமது ஈமானிய உணர்வுகளை வெளிப்படுத்தி எமது எதிர்பினை வெளிப்படுத்துவது முஸ்லிம்கள் மீதுள்ள சன்மார்க்க கடமையாகும்.
அத்துடன், இஸ்லாம் பற்றிய தெளிவை மாற்று மத சகோதரர்களுக்கு வழங்கக் கூடிய ஒரு வாய்ப்பாக இதனைப் பயன்படுத்துவது தொடர்பிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
இப்தார் நிகழ்வுகள், பெருநாள் சந்திப்புக்கள் என கடந்த காலங்களில் மாற்று மத சகோதரர்களுடனான உறவு வலுப் பெற்று வருகின்றமை பாராட்டத்தக்க அம்சமாகும்.
எனினும், பரம்பரைச் சொத்தாக நாம் பெற்றுக் கொண்ட, மனித வாழ்க்கைக்கு சுபிட்சத்தை ஏற்படுத்த வந்த, இறை வழிகாட்டலின் சுவையை உணராது வழிகாட்டலில் வறுமையோடு வாழுகின்ற எமது கொள்கையில் அயலவர்களுக்கு வாழ்வின் நிம்மதிக்கான தீர்வை நாம் எப்பொழுது வழங்கப் போகிறோம் என்பது பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும்.
கடந்த காலங்களில் நாம் எமக்கு மத்தியில் சர்சைப்பட்டு மார்க்கம் அனுமத்தித்த கருத்து வேறுபாடுகளில் எமது பக்க நியாயங்கள் வெல்வதற்காக பரஸ்பரம் உழைத்து நேரம் செலவழித்தது போதும். உலகம் அழியும் வரையிலும் நிச்சயம் கருத்து வேறுபாடுகள் இருக்கவே செய்யும். இதனை விடுத்து, அனைத்து தரப்பினரும் முஸ்லிம் சமூகத்துக்கு வெளியே வந்து கொள்கை வறுமையில் வாடுகின்ற சகோதர சமூகத்துக்கு இறைவழி காட்டலை கொண்டுசேர்க்கும் பணியில் உழைப்பதே எமக்கு முன்னால் பணியாகும்.
tothanks lankamuslim.org


